சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள்! மக்களே.. சூதானமா இருங்க!

7

சென்னை: சென்னையில் வெள்ள அபாய பகுதிகளில் கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர்.



வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்டங்கள் தோறும் உள்ள கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். சென்னையில் ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.

சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள 203 இடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மழை எதிரொலியாக, சென்னையில் 1860ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த திருவல்லிக்கேணி சட்டம், ஒழுங்கு காவல்நிலையம் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.

தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் உள்ள காவல் நிலையங்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

Advertisement