'சட்'டென்று மாறியது வானிலை! சென்னைக்கு இன்று 'ரெட்' அலர்ட்! மக்களே எச்சரிக்கை

1

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.


@1brவங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு எதிரொலியாக சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் இன்று(அக்.15) காலை முதலே விடாது மழை பெய்து வருகிறது. சென்னையில், கோயம்பேடு, கத்திபாரா, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, பள்ளிக்கரணை, அண்ணாநகர், கிண்டி, சைதாப்போட்டை, மயிலாப்பூர், அண்ணாசலை, எம்ஆர்சி நகர் என பல பகுதிகளில் மழை இன்னமும் விடவில்லை. வேளச்சேரியில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் வாகனங்கள் தேங்கிய நீரில் மெதுவாக செல்கின்றன. சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனுக்குடன் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளில் மஞ்சள், ஆரஞ்சு, ரெட் என்ற இரண்டு வகையான கணிப்புகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதில் மஞ்சள் அலர்ட் என்றால் வானிலை முன்னறிவிப்பு பற்றிய தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் எனலாம். இந்த கணிப்பின் படி 6 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழையை எதிர்பார்க்கலாம்.

ஆரஞ்சு அலர்ட் என்றால் கனமழை வாய்ப்பு. அரசு நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். ரெட் அலர்ட் என்றால் வானிலை மிக மோசமாக இருக்கும் என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கு மேல் கனமழை பதிவானால் ரெட் அலர்ட் விடுக்கப்படும்.

தற்போது அப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும். சில பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையமானது,தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலை தள பதிவில் வெளியிட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று காலை 8.30 மணிவரையான மழை நிலவரத்தையும் வெளியிட்டு இருக்கிறது.

செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், அக்டோபர் 16ம் தேதி தான் சென்னைக்கு ரெட் அலர்ட் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது மழை நிலவரம், காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் போக்கை கணித்து, இன்று ரெட் அலர்ட் என்று அதிகாரப்பூர்வமாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Advertisement