துறை வாரியாக விரைவில் முதல்வர் ஆய்வு: அமைச்சர்களுக்கு ‛செக்'

2

சென்னை : அமைச்சர்களின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விரைவில் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். அதில், துறைகளின் செயலர்களுக்கு பதிலாக, அமைச்சர்களே அவற்றின் நிலை குறித்து விளக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


கடந்த மூன்றரை ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம், வீடு தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இத்திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்றடைந்துள்ளதா என, மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதை, கோவையில் இருந்து நேற்று அவர் துவக்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து அவர், துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தவும் உள்ளார். சட்டசபையில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கலுக்கு பின் நடந்த மானிய கோரிக்கைகள் தாக்கலின் போது, துறையில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்ட அறிவிப்புகளை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.



வழக்கமாக, முதல்வர் தலைமையில் நடக்கும் துறையின் ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள், செயலர்கள், துறை தலைவர்கள் பங்கேற்பர். செயலர்களே திட்டங்களின் நிலையை, முதல்வருக்கு விளக்கி கூறுவர்.



சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாட்டை தெரிந்து கொள்ளவும், சரிவர செயல்படாமல் உள்ளவர்களை மாற்றவும், ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர், ஒவ்வொரு துறையின் ஆய்வு கூட்டத்தையும், சென்னை தலைமை செயலகத்தில் விரைவில் நடத்த உள்ளார்.



அதில், செயலர்களுக்கு பதிலாக, துறை அமைச்சர்களே பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்கள் துறையின் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள், அவற்றின் தற்போதைய நிலை, எத்தனை நிறைவேற்றப்பட்டு உள்ளன, நிலுவையில் உள்ளவை எவை, அதற்கான காரணம் தொடர்பாக, முதல்வரிடம் விளக்கி கூற வேண்டும். முதல்வர் ஏதேனும் கேள்வி கேட்டால், அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



விபரம் கேட்கின்றனர்


ஒவ்வொரு துறையிலும் பணிகள் தொய்வின்றி வேகமாக நடக்க, அமைச்சர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என, முதல்வர் கருதுகிறார். இதனால், அவர் நடத்த உள்ள ஆய்வு கூட்டங்களில், செயலர்களுக்கு பதிலாக, அமைச்சர்கள் மட்டுமே பேசவும், பதிலளிக்கவும் வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் தான், தற்போது அமைச்சர்கள் தங்கள் துறையின் அதிகாரிகளை அழைத்து, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.


- அரசு உயரதிகாரி.

Advertisement