ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்; அ.ம.மு.க., நிர்வாகி மீது புகார்
பல்லடம்; வியாபாரி ஒருவரிடம், 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, பல்லடம் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், போலீசில் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் சுந்தர்ராஜ் 63. பல்லடம், கடை வீதியில், வணிக வளாகம் வைத்துள்ளார். இவரிடம், மூர்த்தி என்பவர் பணம் கேட்டு மிரட்டியதாக, சுந்தர்ராஜ் பல்லடம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஐந்து பேருக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ளது. இதற்கு, பார்க்கிங் வசதி இல்லை என்று, திருப்பூர் மாவட்ட அ.ம.மு.க., அவைத் தலைவராக உள்ள மூர்த்தி என்பவர், நகராட்சியில் புகார் அளித்தார். இது குறித்து, நகராட்சி நகர ஊரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, மூர்த்தியிடம் சமாதானம் பேசி எழுதிக் கொண்டு வாருங்கள் என்றார்.
இதனால், மூர்த்தியை நேரில் சந்தித்து, சுந்தர்ராஜ் பேசியதில், 15 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இது மிக அதிகம் என்றதற்கு, ''எனக்கு மேல் இரண்டு பேர் உள்ளனர். இது ஒன்றும் காய்கறி வியாபாரம் கிடையாது,'' என மூர்த்தி சத்தம் போட்டுள்ளார். இதனால், ஆதாரத்தை உண்டாக்க வேண்டி, 20 ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு, தீபாவளி முடிந்ததும் நல்ல செய்தியாக கூறுகிறோம் என்று கூறி வந்து விட்டோம். நாங்கள் புகார் அளிப்பதை தெரிந்து கொண்டு, 20 ஆயிரம் ரூபாயை மூர்த்தி திருப்பி அனுப்பி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, புகாரில் சம்பந்தப்பட்ட மூர்த்தியிடம் கேட்டதற்கு, ''நான் அப்படியெல்லாம் யாரையும் மிரட்டவில்லை. வீடு தேடி வந்து, 20 ஆயிரம் ரூபாயை எனது பாக்கெட்டில் வைத்தார்கள். வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தும் வாங்காததால், 'கூகுள்பே' வாயிலாக பணத்தை திருப்பி அனுப்பினேன். வேண்டுமெனில், சட்டரீதியாக சந்தித்துக் கொள்ளட்டும்,'' என்றார்.
திருப்பூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளர் கணேசன் கூறுகையில், ''வணிகர்களை, இதுபோன்ற நுாதன முறையில் மிரட்டுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அவ்வகையில், 15 லட்சம் ரூபாய் கேட்டு அ.ம.மு.க., மாவட்ட நிர்வாகி மூர்த்தி மிரட்டியுள்ளார். இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் மாதையன், ''இது தொடர்பாக, மூர்த்திக்கு சம்மன் அளிக்கப்பட்டு நாளை (இன்று) விசாரிக்கப்படும்,'' என்றார்.