ரூ.158.32 கோடியில் தொழில்நுட்ப பூங்கா: கோவையில் முதல்வர் திறந்து வைத்தார்

கோவை; தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோவை விளாங்குறிச்சி 'எல்காட்' வளாகத்தில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பின், அவர் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு, கட்டடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''கோவையில் தொழில்நுட்ப பூங்கா கட்ட, 2020 ல்திட்டமிடப்பட்டது.

கடந்த ஆட்சியிலேயே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவை பெற்றே கட்டடம் முடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடம் ரூ.158.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. எல்காட் வளாகத்தில், 2.94 லட்சம் சதுர அடிப் பரப்பில் கட்டப்பட்டுள்ள இத்தகவல் தொழில்நுட்ப பூங்கா வாயிலாக, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.

இரண்டு நாட்கள் கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானத்தில் நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

'கோவை மக்களின் அன்பு'



இதில், பூரிப்படைந்த முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில், 'நல்லா இருக்கீங்களா தலைவரே... என கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரை திரண்டிருந்த மக்களின் வரவேற்பு, 4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணி நேரம் ஆனது! கோவை மக்களின் அன்பு' என, குறிப்பிட்டு, ஹார்ட் சிம்பல் பதிவிட்டுள்ளார்.

கோவையின் உற்சாக வரவேற்பில் நெகிழ்ந்துள்ள அவர், தனது மகிழ்ச்சியை, இவ்வாறு பகிர்ந்திருக்கிறார்.

Advertisement