பெரும்பாக்கம் ஏரி கரை பலவீனம் கனமழை பெய்தால் உடையும் அபாயம்

-பெரும்பாக்கம்,தென்சென்னையில் வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு நடுவில், பெரும்பாக்கம் ஏரி பரந்து விரிந்து அமைந்துள்ளது.

இந்த ஏரியின் பரப்பு 1960ம் ஆண்டு, 450 ஏக்கராக இருந்துள்ளது. ஆனால், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதால், 2015ல் ஏரியின் பரப்பு, 258 ஏக்கராக சுருங்கியுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பழைய பரப்பளவுக்கு கொண்டு வருவதற்கு, குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க, 2020ல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இருப்பினும் அதற்கான பணிகள் மந்தமாகவே உள்ளது.

பெரும்பாக்கம் ஏரியில் உள்ள இயற்கையான வளத்தை அடிப்படையாக கொண்டு, ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்தது. இதற்காக, 3.40 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இந்த நிதியில், ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதுதவிர, ஏரிக்கரைகளில் நடைபயிற்சி தளமும், பறவைகள் அமர்வதற்கு வசதியாக மண் திட்டுகளும் அமைக்கப்பட்டன.

மாம்பாக்கம் சாலையோரத்தில் ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 10 ஏரிகளை புதுப்பிக்க சி.எம்.டி.ஏ., மற்றும் நீர்வள மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, 100 கோடி ரூபாயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பெரும்பாக்கம் ஏரியும் அடங்கும்.

ஆனால், பெரும்பாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கவில்லை. மழையின்போது திடீரென அதிகப்படியான நீரை வெளியேற்றும் நிலையை தவிர்க்க, 98 லட்சம் ரூபாயில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைக்கப்பட்டது.

அதன் பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏரி பராமரிக்கப்படவில்லை. இதன் விளைவாக தற்போது ஏரியில் அதிகளவில் ஆகாயத்தாமரை நிறைந்துள்ளது. நடைபாதையும் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது.

நடைபாதையில் நடக்க முடியாத அளவிற்கு சில இடங்களில் புதர்மண்டி உள்ளது. நடைபாதையின் அடியில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியின் கரைகள் பலவீனமடைந்து வருகின்றன.

தொடர் மழை பெய்து ஏரி நிரம்பினால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஏரியின் கிழக்கு பகுதி குடியிருப்புகள் நீரில் மூழ்க அதிக வாய்ப்பு உள்ளது.

'இந்த விபரீதத்தை சம்பந்தப்பட்ட துறையினர் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை சீரமைக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement