ராமேஸ்வரத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் சுற்றுலாப்பயணிகள் அச்சம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதையறிந்து அச்சப்படுகின்றனர்.

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தீவிர, விபத்து சிகிச்சை மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலருக்கும் காய்ச்சல், கை, கால் மூட்டு வலி, உடல் சோர்வு, ஜலதோசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் தடுப்பு மாத்திரை, ஊசி எடுத்துக் கொண்டாலும் 5 முதல் 7 நாட்கள் வரை காய்ச்சல், உடல் வலி இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த காய்ச்சல் கொசு மூலம் பரவ வாய்ப்பு இல்லை. வைரஸ் காய்ச்சலாக இருக்கக்கூடும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தெரிய வரும் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைகின்றனர். எனவே ராமேஸ்வரம் பகுதியில் மக்களிடம் ரத்தம் பரிசோதித்து, மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement