இலவச அரிசி டெண்டரில் நவீன அரிசி ஆலைகளுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் இலவச அரிசி டெண்டரில் நவீன அரிசி ஆலை கலந்து கொள்ள வாய்ப்பு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறந்து தீபாவளிக்கு, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் அரிசி கொள்முதல் செய்வதில், பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பல தொகுதிகளில் இதுவரை, இலவச அரிசி மற்றும் சர்க்கரை கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நவீன அரிசி ஆலை சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் நடராஜன் மற்றும் யுவராஜ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர்.

அவரிடம், இலவச அரிசி டெண்டரில், புதுச்சேரி நவீன அரிசி ஆலை கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கவும், மத்திய அரசு அளித்துள்ள சலுகைகளை டெண்டரில் அமல்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement