100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத அவலம்
கம்பம், : ஊராட்சிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50 நாட்களாக சம்பளம் வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.
கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் சம்பளமாக ரூ.284 இருந்தது தற்போது ரூ.310 வழங்குகின்றனர்.
இத் திட்டத்தின் வேலை செய்பவர்களுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் கடந்த 50 நாட்களாக சம்பளம் வரவு வைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் திட்ட பணிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.
இதுபற்றி தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 7 வாரங்களாக இன்று வரை 50 நாட்கள் சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்காததால் தீபாவாளி கொண்டாட்டம் சிரமத்துடன் இருந்தது. கடன் வாங்கி தீபாவளியை சமாளித்து விட்டோம் என்கின்றனர். ஆனால்சம்பள பாக்கி தொடர்பாக ஊராட்சி செயலர்களோ, ஒன்றிய பி.டி.ஓ.க்களோ வாயை திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர் என்றனர்.