குடிநீரின்றி தவிக்கும் மாணவர்கள்; விருதையில் நுாற்றாண்டு பள்ளியின் அவலம்
விருத்தாசலத்தில் நுாற்றாண்டு விழா கண்ட அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பிளஸ் 2 வரை 800 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.
இங்கு பயின்ற மாணவர்கள் ஒருங்கிணைந்து முன்னாள் மாணவர் சங்கம் என்ற பெயரில் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். சமீபத்தில் அமைச்சர் கணேசன் தலைமையில் கலையரங்கம், நுழைவு வாயில் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
அதுபோல், என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 35 லட்சம் ரூபாயில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கழிவறையில் இருந்த உபகரணங்களை சமூக விரோதிகள் உடைத்து, திருடிச் சென்றனர். பள்ளி நிர்வாகம் வேண்டுகோளின்பேரில், அவை சீரமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் திருடிச் செல்லப்பட்டன.
பள்ளியில் இருந்த மின்சாதன பொருட்கள், இரும்பு சாதனங்கள் திருடுபோவது வாடிக்கையாக இருந்தாலும், இதுநாள் வரை எந்தவொரு குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.
தற்போது மாணவர்கள் நலன் கருதி 8 லட்சம் ரூபாயில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்திய நிலையில், உவர்ப்பு நீராக இருப்பதால் மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் சிரமமடைகின்றனர். மாறாக நகராட்சி குடிநீர் பைப்லைனில் இருந்து முறைகேடாக நீரேற்றம் செய்து, மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.
அதுபோல் என்.எல்.சி., நிர்வாகம் கட்டிக் கொடுத்த கழிவறைகளில் அடிக்கடி திருடுபோவதால், பூட்டியே கிடக்கிறது.
இதனால் விளையாட்டு மைதானத்தில் மண்டிக் கிடக்கும் முட்புதர்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மாணவர்கள் இயற்கை உபாதைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, நுாற்றாண்டு விழா கண்ட அரசு பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகளை தன்னிறைவாக ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.