புறவழிச்சாலை பெயர் பலகைகளில் ஊர்களின் பெயர்களில் எழுத்து பிழை
நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் கடலுார் அருகே ஊர்களின் பெயர்கள் பிழையாக வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு, 194 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை-45 ஏ உள்ளது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் ஆகிய நகருக்குள் செல்லாமல் வெளிவட்ட சாலையில் நாகப்பட்டினம் சென்றடையும் வகையில் புறவழிச்சாலை பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இச்சாலையில் பணிகள் முடிந்த பகுதிகளில் ைஹமாஸ் விளக்கு, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலுார் மாநகரின் வெளிவட்ட பகுதிகளில் புறவழிச்சாலை பணிகள் முடிந்த பகுதிகளில் ஊர்களை குறிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் அடுத்த நத்தப்பட்டு, கோண்டூர் பகுதிகளை குறிக்கும் வகையில் பலகைகள் வைத்துள்ளனர். அதில், நத்தப்பட்டு என்பதற்கு 'நடப்பட்டு' எனவும், கோண்டூர் என்பதற்கு 'கொண்டூர்' எனவும் ஊர்களின் பெயர்கள் பிழையாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கள் பகுதியின் பெயர்கள் பிழையாக வைத்துள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் வைத்துள்ள பெயர் பலகைகளில் பிழையின்றி ஊர்களின் பெயர்கள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.