அகமலை மலைப்பாதை மண் சரிவு: சீரமைக்கும் பணி தீவிரம்

போடி, : அகமலை மலைப்பாதையில் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகமலை ஊராட்சி. இப்பகுதியில் கண்ணக்கரை, அகமலை, அண்ணாநகர், சொக்கன்அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானகமிஞ்சி, மருதையனூர், பட்டூர் உட்பட பல்வேறு மலை கிராமங்கள் அடங்கி உள்ளன. இங்கு 4 ஆயிரம் ஏக்கரில் ஏலம், காப்பி, மிளகு, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளத்தில் இருந்து கண்ணகரை வழியாக அகமலை செல்லும் ரோட்டில் கணேசன் தோட்டம், லீலாவதி பெண்ட் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் ரோடு சேதம் அடைந்து நடந்து கூட செல்ல முடியாமல் உள்ளது.

இதனால் 15 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் விழுந்து கிடந்த பாறைகள், மரங்களை அகற்றி ரோடு சீரமைக்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement