செய்த பணிகளுக்கு நிதி வராததால் ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு
ஊராட்சிகளில் நடந்து முடிந்த, பல்வேறு திட்ட பணிகளுக்கு 20 கோடி நிதி வழங்காததால், ஒப்பந்ததாரர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தின் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி பகுதிகளில் சிமென்ட் சாலை, அங்கன்வாடி மைய கட்டடம், குளம் துார் வாருதல், ரேஷன் கடை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறும். இதற்கான, ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிதியை, பணிகள் முடிந்தவுடன் அரசு உடனடியாக வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக, 2024-25ஆண்டுக்கான, கடலுார் மாவட்டத்தில் 138 ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் நடந்துள்ளது. தற்போது முடிவுற்ற பணிகளுக்கான நிதியை தொகையை சென்னை ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து விடுவிக்காததால், கடலுார் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் பில் தொகைக்காக 3 மாதங்களாக காத்திருக்கின்றனர். கடலுார் மாவட்டத்தில் மட்டும் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய தொகை, 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஊராட்சிகளில் நடைபெறும் இதுபோன்ற பணிகளை சிறு ஒப்பந்தாரர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். அதிகபட்சமாக 10 லட்சத்திற்குள் இருக்கும் பில் தொகை கிடைக்காமல் 3 மாதங்கள் கிடப்பில் உள்ளதால், பலர் பாதித்திள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.