'2026 தேர்தலிலும் தி.மு.க.,வுடன் கூட்டணி'
இடைப்பாடி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி, 8 டவுன் பஞ்சாயத்துகள், 4 ஒன்றியங்கள் என, 1,070 கிராமங்களுக்கு, 854.37 கோடி ரூபாய் மதிப்பில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே நெடுங்குளம் காவிரி கரையோர பகுதியில் தனி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்பட்டு வரும் நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலைய பகுதிகளை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,வான, கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். தி.மு.க.,வுடன், 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணியில் நீடிப்போம். முதல்வரை பொறுத்த வரை யார் என்ன பேசினாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தாமதமின்றி செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எங்கள் பகுதி மக்களுக்கு, என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். வெறும் அரசியல் பேசி நாங்கள் விளம்பரம் தேடுபவர் அல்ல. முதல்வரும் அப்படித்தான்.
தி.மு.க.,வில் தலைவருக்கு பின் யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது அந்த கட்சி எடுக்க வேண்டிய முடிவு. ஒரு கட்சியில் யார் தலைவராக வேண்டும் என்பதை, இ.பி.எஸ்., முடிவு செய்ய முடியாது. 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.