சபரிமலை சீசனுக்கு குமுளி பஸ் ஸ்டாண்ட்- தயாராகுமா; போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம்
கூடலுார்: சபரிமலை சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் குமுளியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குமுளி பஸ் ஸ்டாண்ட் தயாராகுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்குவார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக குமுளி வழியாக சபரிமலைக்கு செல்வார்கள்.
குமுளியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே வாகனங்கள் நிறுத்துவதால் சபரிமலை சீசனில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். மேலும் வழக்கமாக கம்பம், கூடலுார் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க 2022 ல் முதல்வர் ஸ்டாலின் ரூ. 7.30 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் போக்குவரத்து துறை சார்பில் பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணி செய்வது எனவும், அதற்காக அத்துறை சார்பில் ரூ. 5.5 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்து. இதற்கான பூமி பூஜை 2023 செப்.11ல் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள், போக்குவரத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 14 மாதங்களாகியும் கட்டடப் பணிகள் முடிவடையவில்லை. அவசியம் கருதி பணிகளை துரிதப்படுத்தவும் இதுவரை போக்குவரத்துறை அதிகாரிகள் முன் வரவில்லை. பெயரளவுக்கு அவ்வப்போது வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
மலைப்பகுதியாக இருப்பதால் கட்டுமானப் பணியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பஸ்ஸ்டாண்ட் விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீசன் துவங்க இன்னும் 10 நாட்கள் உள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் அதிகம் வர துவங்கி விடுவார்கள். கடந்த ஆண்டு டெப்போ இருந்த பகுதியில் பஸ்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணி நடப்பதால் அப்பகுதியில் பஸ்கள் நிறுத்த முடியாது. அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் பல மணி நேரம் ஐயப்ப பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.