'பிற மாநிலங்களே பாராட்டும்படி திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர்'
தலைவாசல்: ''பிற மாநிலங்களே பாராட்டும்படி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
பிற மாநிலங்களே பாராட்டும்படி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தலைவாசல் ஒன்றியத்தில் மகளிர் உரிமை திட்டத்தில், 26,393 பேர், முதியோர் உதவித்தொகை திட்டத்தில், 9,389 பேர் பயன்பெறுகின்றனர். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், 12.50 கோடி ரூபாய் மதிப்பில், வீடுகள் கட்டுமான பணி நடக்கிறது. 10 கோடி ரூபாயில், சாலை பணிகள்; அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 12 கோடி ரூபாய்; 15வது நிதிக்குழு திட்டத்தில், 28.76 கோடி ரூபாய் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் குறைகளை கண்டறிந்து தீர்வு காணும்படி, மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இணைய வழி சான்று, பல்வேறு துறைகள் சார்பில், 37.40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் வழங்கினார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை, குணசேகரன், கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், டி.ஆர்.ஓ., மேனகா உள்பட பலர் பங்கேற்றனர்.