ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.30 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் எனக்கூறி ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம், 5.30 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் சாலையை சேர்ந்தவர் சேதுரத்னம், 59. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த செப்.,9ல், இவரது மொபைல் எண், ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைக்கப்பட்டது.

அந்த குரூப்பில் பங்கு சந்தை தொடர்பான விபரங்கள் பதிவிடப்பட்டன. அதில், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது-. இதையடுத்து, அதில் உள்ள லிங்க் மூலம் சேதுரத்னம் தன் விபரங்களை பதிவு செய்து முதலீடு செய்தார். அதற்கு லாபத்தொகை வரவே, தன்னிடம் இருந்த, 5.30 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் பிறகு அவருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து அவர், வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்த நபரின் எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
போலீசார், சேதுரத்னம் அனுப்பிய மூன்று வங்கி கணக்குகளில், ஒரு வங்கி கணக்கில் அனுப்பிய, 79 ஆயிரத்து, 474 ரூபாயை முடக்கினர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement