அம்மா உணவகமா, குப்பை குடோனா; பணியாளர்களை எச்சரித்த அலுவலர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர், அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரியில் காந்தி சாலை, சந்தைப்பேட்டை பகுதிகளில் அம்மா உணவகங்கள் உள்ளன. சந்தைப்பேட்டை அம்மா உணவகத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அம்மா உணவகத்தில் வெளியே செல்லும் பாதை அடைக்கப்பட்டு, அந்த வளாகத்தில் பழைய டயர்கள், வெங்காயம், பூண்டு உள்ளிட்டவை மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நகராட்சி தலைவர் பரிதா நவாப், அங்கு பணிபுரியும் பெண்களை அழைத்து, 'இது அரசால் குறைந்த விலையில் ஏழைகள் பயன்பெற, உணவு வழங்குவதற்காக செயல்படும் திட்டம். இந்த இடத்தில் குப்பை குடோன் போல பொருட்களை யார் அடுக்கி வைத்தது' என கேட்டார். வியாபாரிகள் இங்கு அடுக்கி சென்றுள்ளனர் என கூறினர். இதையடுத்து அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.
சமையல் பொருட்கள் அறை, சமையல்கூடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு இருந்தால் அரசுக்கு கெட்டப்பெயர் வரும், அதுகூட உங்களுக்கு தெரியாதா? சாப்பாடு ருசியாக இருந்தால் மட்டும் போதாது. இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இது போன்ற நிலை தொடர்ந்தால் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடப்பட்டது.
அம்மா உணவக பணியாளர்கள், நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம், 'ஆர்.ஓ., வேலை செய்யவில்லை. தட்டு கழுவும் இடத்தில் தளம் பெயர்ந்துள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும்' என்றனர். இதையடுத்து, உடனடியாக அந்த பணிகளை செய்து தருமாறு அலுவலர்களுக்கு நகராட்சி தலைவர் உத்தரவிட்டார்.