காலாவதி தேதியின்றி உணவுப்பொருள் விற்ற ஸ்வீட்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல்: ரசீதில் நுகர்வோர் பெயரை குறிப்பிட மறுத்தது, காலாவதி தேதியின்றி உணவுப்பொருள் விற்பனை செய்த, ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரி நிறுவனம், 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டைபுதுாரை சேர்ந்தவர் ஆறுமுகம், 66. இவர், 2023 செப்டம்பரில், கோவையில் சத்தி ரோட்டில் கணபதி பகுதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரியில், 134 ரூபாய் செலுத்தி, 200 கிராம் மைசூர்பாகு வாங்கியுள்ளார். அப்போது, அவரது பெயரில் ரசீது தருமாறு கேட்டதற்கு, கடை பணியாளர்கள் மறுத்து விட்டனர். மேலும், கடையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஸ்வீட், எந்த தேதியில் காலாவதி ஆகிறது என குறிப்பிடப்படவில்லை.

இதனால், கடைக்காரரின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி, இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், ஆறுமுகம், 2023 நவம்பரில், வழக்கு தொடுத்தார். விசாரணை முடிந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், பணம் செலுத்தி பொருளை வாங்கும் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு, விற்பனையாளர் ரசீது வழங்க வேண்டும். ஆனால், உணவுப்பொருள் விற்பனையாளர் இந்த விதியை பின்பற்றவில்லை. மேலும், கடையில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை விற்பனையாளர் மீறியுள்ளார் என, நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு உணவுப்பொருளை விற்பனை செய்த கடை நிர்வாகம், இம்மாதம் இறுதிக்குள் இழப்பீடாக, 8,000 ரூபாய், வழக்கு செலவு, 2,000 ரூபாய் என, மொத்தம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், அடையாளம் தெரியாத நுகர்வோர் பாதிக்கப்பட்டிருப்பதால், நுகர்வோர் நலனுக்காக, 20,000 ரூபாய், மாநில நுகர்வோர் நிதியத்தில், இம்மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

Advertisement