மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி

கடலுார், : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடைபெறவுள்ள ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் ரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் ரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும், பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது.

போட்டிகள், கடலுார் மாவட்டத்தில் முதற்கட்டமாக வரும் 11ம் தேதி அனைத்து கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வி.பி.எஸ்.சி., கட்டடத்தில் ஊராட்சி அளவிலும், இரண்டாம் கட்டமாக 13ம் தேதி வட்டார அளவிலும், மூன்றாம் கட்டமாக வட்டார அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு 15ம் தேதி கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், 2ம் பரிசாக 4,000, மூன்றாம் பரிசாக 3,000 , ரூபாய் வழங்கப்படும்.

2 பேருக்கு தலா 2,500 ரூபாய் வீதம் சிறப்பு பரிசு, 3 பேருக்கு தலா 2,000 ரூபாய் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement