இந்திய உணவு கழகத்திற்கு ரூ.10,700 கோடி கூடுதல் மூலதன நிதி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இந்திய உணவு கழகத்திற்கு கூடுதல் மூலதன நிதியாக ரூ.10,700 கோடியை ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பின் தூணாக இந்திய உணவு கழகம் விளங்குகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், தானிய சேமிப்புகளை பராமரித்தல், சந்தையில் உணவு தானிய விலைகளை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த உணவு கழகம் மேற் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், 2019-2020 நிதியாண்டில் ரூ.4,496 கோடியாக இருந்த இந்திய உணவு கழகத்தின் கூடுதல் மூலதனத்தை, 2023-24 நிதியாண்டில் ரூ.10,157 கோடியாக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யுவும், இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை பலப்படுத்தவும் வழிவகை செய்கிறது. இந்திய உணவு கழகத்தின் பணியை விரிவுபடுத்தும் விதமாக, அதன் மூலதனத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.