ஐ.பி.எல்., ஏலத்தில் 1574 வீரர்கள் * 274 இடத்துக்கு போட்டி
மும்பை: ஐ.பி.எல்., ஏலத்தில் பங்கேற்க 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவில் 18 வது ஐ.பி.எல்., சீசன் 2025ல் நடக்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் சென்னை அணியில் தோனி, ருதுராஜ், ஜடேஜா, மும்பை அணியில் ரோகித், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, பெங்களூருவில் கோலி என 10 அணிகளில் 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 204 இந்தியா, 70 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்ய, வரும் 24-25ல் ஜெட்டாவில் ஏலம் நடக்க உள்ளது. இவர்களுக்காக ரூ. 641.5 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ரிஷாப் எங்கே
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ், ராகுல், அஷ்வின், சகால் உள்ளிட்டோர் அடிப்படை விலை ரூ. 2 கோடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், அவேஷ் கான், காயத்தில் உள்ள ஷமி, தவிர இஷான் கிஷான், தீபக் சகார், வெங்கடேஷ்ல கலீல் அகமதுவும் இப்பட்டியலில் உள்ளனர்.
கடந்த ஆண்டு விலைபோகாத சர்பராஸ், பிரித்வி ஷா ரூ. 75 லட்சம் பட்டியலில் உள்ளார்.
ஸ்டோக்ஸ் இல்லை
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஸ்டோக்ஸ். பிட்னசில் கவனம் செலுத்த கடந்த ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இவர் 2025 ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால், புதிய விதிப்படி ஸ்டோக்ஸ் அடுத்த இரு ஏலத்திலும் (2026, 2027) பங்கேற்க முடியாது.
அமெரிக்காவின் நேத்ராவல்கர் (அடிப்படை விலை ரூ. 30 லட்சம்), கடந்த சீசனில் வாங்கப்படாத ஆஸ்திரேலிய சுழல் வீரர் லியான் (ரூ. 2 கோடி), 2024 ஏலத்தில் ரூ. 24.50 கோடிக்கு விலை போன, வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் (ரூ. 2 கோடி) மீண்டும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஆண்டர்சன் ஆசை
இங்கிலாந்து அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 42. டெஸ்ட் அரங்கில் 704 விக்கெட் சாய்த்த இவர், 2014க்குப் பின் 'டி-20' போட்டியில் விளையாடியது இல்லை. தவிர உலகின் எந்த உள்ளூர் 'டி-20'யிலும் பங்கேற்றது கிடையாது. முதன் முறையாக தற்போது வீரர்கள் ஏலத்தில் ரூ. 1.25 கோடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இத்தாலி வீரர்
இத்தாலி வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் டிராகா 24. கடந்த ஜூன் மாதம் அறிமுகம் ஆன இவர், 4 சர்வதேச 'டி-20' ல் பங்கேற்றார். சமீபத்திய கனடா தொடரில் 6 போட்டியில் 11 விக்கெட் சாய்த்தார். முதன் முறையாக ஐ.பி.எல்., ஏலத்தில் பங்கேற்கிறார். ரூ. 30 லட்சம் பிரிவில் உள்ளார்.