132 ஆண்டுக்கு பின் டிரம்ப் நிகழ்த்திய சாதனை

4

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 132 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப், தேர்தலில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளார். முக்கியமான மாகாணங்களில் டிரம்ப்பிற்கு கிடைத்த ஆதரவே இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


அமெரிக்க அதிபராக தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டாவது தலைவர் என்ற பெருமை டிரம்ப்பிற்கு கிடைத்து உள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனை 132 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டு இருந்தது. குரோவர் கிளெவ்லாண்ட் என்பவர், அமெரிக்காவின் 22 மற்றும் 24வது அதிபராக பணியாற்றினார். 1885 முதல் 1889 ம் ஆண்டு வரையிலும், அடுத்து 1893 முதல் 1897 வரை அதிபராக இருந்துள்ளார்.


அதேபோல் டிரம்ப்பும் 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்தார். 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.


அதேபோல், அதிக வயதுடைய நபர் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் என்றால், அதுவும் டிரம்ப் தான். தற்போது அவருக்கு வயது 78.


கடந்த 20 ஆண்டுகளில் மக்களின் அதிக ஓட்டுகளை பெற்ற முதல் குடியரசு கட்சி வேட்பாளராகவும் டிரம்ப் திகழ்வதாக கூறப்படுகிறது.

Advertisement