காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறோம் ஆணைய கூட்டத்தில் தமிழகம் உறுதி
சென்னை : ''காவிரி நீரை தேவை இல்லாமல், தமிழகம் வீணடிப்பது கிடையாது; சிக்கனமாகவே பயன்படுத்துகிறோம்,'' என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை செயலர் மணிவாசன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின், 35வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.
தமிழகம் சார்பில், நீர்வளத் துறை செயலர் மணிவாசன், பன்மாநில நதிகள் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
'தமிழகத்திற்கு ஜூன் மாதம், 6.93 டி.எம்.சி., நீர், செம்டம்பர் மாதம் 9.14 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா அரசு நிலுவை வைத்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, மாத வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நீரை விடுவிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து பேசிய, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'கிடைக்கும் காவிரி நீரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தினார்.
கூட்டம் முடிந்ததும், வெளியே வந்த நீர்வளத் துறை செயலர் மணிவாசன், கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து, கூறியதாவது:
தமிழகத்திற்கு ஜூன் மாதம் முதல் இன்று வரை, 145 டி.எம்.சி., நீரை, கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 247 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அணைகளில், தேக்கி வைக்க முடியாத வெள்ள நீரை, தமிழகத்திற்கு திறந்து விடுகின்றனர். இதை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாத வாரியாக நீரை வழங்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, பிலிகுண்டுலுவில் நீரளவை தளத்தை கடந்து, வினாடிக்கு 11,000 கன அடி நீர் வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருகிறது. இதனால், டெல்டா விவசாயிகளுக்கு, பாசனத்திற்கு எந்த பிரச்னையும் இருக்காது; குடிநீர் தேவையிலும் பிரச்னை இருக்காது.
வரும் காலங்களில், மாத வாரியாக நீரை ஒதுக்கீடு செய்தால், எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக எந்த உத்தரவையும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பிறப்பிக்கவில்லை. நீரை சிக்கனமாக பயன்படுத்த, ஆலோசனை வழங்கப்பட்டது.
தேவைக்கு அதிகமான நீரை, தமிழகம் வீணடிப்பது கிடையாது. தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்துகிறோம் என எடுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.