தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு... உதயநிதி சொன்னதை செய்தாரா முதல்வர்; பா.ஜ., கேள்வி

சென்னை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.


பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (நவ.,5) இரண்டு நாள் பயணமாக கோவை வந்தார். அவர் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பா.ஜ.,வுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'திராவிட மாடல்' அரசு என்று தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் 'தமிழை' புறக்கணிப்பது வியப்பல்ல என்ற போதிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை உதாசீனப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.


தி.மு.க.,வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை 'தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது' என்று கடந்த மாதம் 21ம் தேதி உதயநிதி கூறியதற்கு அர்த்தம் இது தானோ? அதனால் தான் பாடாமல் விட்டு விட்டீர்களா ஸ்டாலின் அவர்களே?


தி.மு.க., என்றைக்குமே தமிழர் விரோத கட்சி தான் என்பதை இந்நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. என் இனிய தமிழை, மங்கா புகழ் கொண்ட தமிழை தி.மு.க., போற்றாதிருப்பதே சிறப்பு, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement