திருத்தணி கோவிலில் சஷ்டி நிறைவு உற்சவர் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. தினமும் மூலவருக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு காலை 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தினமும் லட்சார்ச்சனை நடந்தது.

நேற்று சஷ்டியின் நிறைவு நாளில் அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்ககவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு வழக்கம் போல் லட்சார்ச்சனை விழா நடந்தது.

மாலை, 4:30 மணிக்கு திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து மலர் கூடைகளுடன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை- ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் ஏந்தி மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு மங்கள வாத்தியத்துடன் சென்றனர்.

மாலை, 5:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, 2,500 கிலோ பல்வேறு வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


புஷ்பாஞ்சலி ஏன்?



முருகனின் ஆறுபடை வீடுகளில், திருத்தணி கோவிலை தவிர்த்து மீதமுள்ள ஐந்து கோவில்களில் கந்தசஷ்டி நிறைவு நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகர் சினம் தணிந்து வள்ளி, தெய்வானையை திருமணம் செய்து சாந்தமுடன் உள்ளதால் சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நடந்து வருகிறது.**

Advertisement