எதிர்தரப்புடன் கைகோர்ப்பு? வழக்கறிஞர் எரித்து கொலை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து, 21. இவர் தன் சொத்து தொடர்பான வழக்கை நடத்துவதற்கு, தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி, 55, என்பவரிடம் பத்திரங்களை ஒப்படைத்திருந்தார். ஆனால், கிறிஸ்டோபர் சோபி வழக்கை சரிவர நடத்தவில்லை என கூறப்படுகிறது. எதிர் தரப்பு வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டதாக, இசக்கிமுத்து கருதினார்.
சொத்து பத்திரங்களை திரும்ப தரும்படி இசக்கிமுத்து பலமுறை கேட்டும், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொடுக்காமல் நாட்களை கடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு வாழை கன்றுகள் வேண்டும் என இசக்கிமுத்துவிடம் கிறிஸ்டோபர் சோபி கேட்டுள்ளார். நேரம் பார்த்து காத்திருந்த அந்த நபர், வழக்கறிஞரை பீமநகரி மண் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள குளக்கரைக்கு வரும்படி கூறினார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிறிஸ்டோபர் சோபியை, இசக்கிமுத்து வெட்டி கொலை செய்தார். பின் அவரது உடலை இழுத்துச் சென்று தீ வைத்தார்.
பீமநகரி அருகே ஒரு உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதை அறிந்த இசக்கிமுத்து, ஆரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.