அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ., முற்றுகைப் போராட்டம் 108 பேர் கைது
ராமநாதபுரம்: முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாக காட்டும் அமரன் சினிமா படத்தை தடை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் தியேட்டரை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே நடந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் ரியாஸ்கான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் சினிமாவில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டியுள்ளனர்.
இப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். மேலும் முதல்வர் ஸ்டாலின் அமரன் சினிமாவை பாராட்டியுள்ளதை கண்டிக்கிறோம். அவர் அதனை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சுலைமான், மாவட்ட செயலாளர்கள் நஜ்முதீன், ஆசாத், நகரத்தலைவர் ஹக்கீம் விமன் என பலர் பங்கேற்றனர். மாலை 6:30மணிக்கு தியேட்டரை முற்றுகையிட முயன்ற போது 53 பெண்கள் உட்பட 108 பேரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.