ஆட்டோ டிரைவர் கொலை மேலும் ஒருவர் கைது வெடிகுண்டுகள் பறிமுதல்
சிவகங்கை:சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் தீபாவளியன்று நடந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40, கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கீழவாணியங்குடியில் மணிகண்டன், அருண்குமார் 26, ஆதிராஜா 50, ஆகியோரை தீபாவளியன்று கண்மாய் கரையில் டூவீலர்களில் சென்ற சிலர் வெட்டியதில் மணிகண்டன் இறந்தார்.
மணிகண்டன் கொலையில் தொடர்புடைய 7 பேரை நவ., 4 ல் போலீசார் கைது செய்தனர். நவ., 5ல் தவம் என்ற முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் மேலுார் ரோட்டில் இன்ஸ்பெக்டர் அன்னராஜா மற்றும்போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிவகங்கை என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த மருது மகன் சிங்கமுத்துவை 28, கைது செய்தனர். சிங்கமுத்துக்கு மணிகண்டன் கொலையில் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய கீழக்குளத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். வீட்டில் வைத்திருந்த 13 நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு குறித்து விசாரித்த போது போலீசாரை தள்ளிவிட்டு சிங்கமுத்து அருகில் உள்ள பள்ளி சுவர் மீது ஏறி குதித்ததில் அவருக்கு இடது கை முறிந்தது. அவரை பிடித்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது: சிங்கமுத்து துாத்துக்குடியில் ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். தீபாவளிக்கு முதல் நாள் சிவகங்கை வந்தார். நண்பர்கள் அவரை கீழக்குளத்திற்கு கிரிக்கெட் விளையாட அழைத்துள்ளனர். அங்கு மணிகண்டன் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சிங்கமுத்து உள்ளிட்டோர் மணிகண்டன், நண்பர்களை தாக்கினர். இதில் மணிகண்டன் இறந்தார் என்றனர்.