ரேஷன் கடை பணியாளர்கள் கைது
சிவகங்கை: பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்திற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளரை 20 கி.மீ., க்குள் பணிஅமர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அந்தந்த மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மறியலில் ஈடுபட்டனர். மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி, செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கவுரி நன்றி கூறினார். சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., சண்முகப்பிரியா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்தனர்.