உயிர்பலி வாங்கும் கால்வாய் தடுப்பு அமைக்க கோரிக்கை
திருப்புவனம்: திருப்புவனம் வழியாக செல்லும் பிரமனுார் கால்வாயில் தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம், பிரமனுார், மாரநாடு கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பிரமனுார் கால்வாய் தட்டான்குளம் தடுப்பணையில் தொடங்கி திருப்புவனம் நகர் வழியாக ஏழு கி.மீ., பயணம் செய்து கண்மாயை சென்றடைகிறது.
மற்ற பகுதிகளில் திறந்த வெளி கால்வாயாக செல்லும் நிலையில் தேரடி வீதி அருகே 500 மீட்டர் தூரத்திற்கு குகை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. நீர் வரத்து காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கால்வாயில் தவறி விழுந்து குகை அமைப்பினுள் சென்று உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிரமனுார் கால்வாயில் தண்ணீர் திறப்பின் போது உயிர்ப்பலி ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டு பிரமனுார் கால்வாயில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டு இரண்டு கி.மீ., துாரத்தில் உடல் மீட்கப்பட்டது. பல முறை இந்த குகை அமைப்பில் சிக்கியவர்களின் உடல்களை கூட கடும் சிரமத்திற்கு இடையில் தான் மீட்கப்பட்டுள்ளனர். திதி பொட்டல் அருகே பிரமனுார் கால்வாயின் குறுக்கே தடுப்பு அமைத்தால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க முடியும்.
தீயணைப்புத்துறையினர் கூறுகையில், இந்த குகை போன்ற அமைப்பு 500 மீட்டர் நீண்டுள்ளது. உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறையும் உள்ளது. 15 அடி ஆழமுள்ள கால்வாயில் 10 அடி உயரத்திற்கு சகதியாக உள்ளது. யாரும் இறங்கினால் கழுத்து வரை சகதியாக இருப்பதால் இறங்கவே முடியவில்லை என்றனர்.
நீர் வரத்து காலங்களில் தண்ணீர் செல்லும் மற்ற காலங்களில் திருப்புவனம்நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் இந்த கால்வாயில் செல்வதால் எப்போதுமே சகதியாகவே உள்ளது. எனவே பிரமனூர் கால்வாயை முழுமையாக தூர் வாருவதுடன் திதி பொட்டல் அருகே இரும்பு தடுப்பு கம்பிகள் பொருத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.