அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியது இழிவுபடுத்துவதாக உள்ளது த.வெ.க., விஜய்க்கு மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் பதில்
மதுரை: ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக த.வெ.க., தலைவர் விஜய் கூறியது இழிவுபடுத்துவதாக உள்ளது'' என மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததே, விலைவாசி உயர்வுக்கு காரணம். நவம்பரில் நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் கோரிக்கையை முறியடிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பிரசாரம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அரசு துறைகளில் பல்லாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் துணைமேயர் பேசுகையில், மழை பாதிப்புக்கு எம்.பி., நிவாரணம் கேட்டதற்கு அமைச்சர், தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கேட்பது எங்கள் உரிமை. அதை அரசு ஏற்கிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். அரசு ஏற்பதில்லை என்பதற்காக கோரிக்கை வைப்பதை நாங்கள் விட்டுவிட முடியாது.
தமிழகத்தில் விஜயகாந்த் துவக்கியபோதும்கூட விஜய் கூட்டத்தைவிட பலமடங்கு கூட்டம் சேர்ந்தது. விஜய் வருகை தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். அதேசமயம் பா.ஜ., அரசுக்கு எதிராக போராட்டத்தில் இணைந்திருப்போம்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என விஜய் கூறியுள்ளார். இது நாங்கள் பதவிக்காக ஓடிக் கொண்டிருப்பது போல உள்ளது. இது இழிவுபடுத்துவதாக உள்ளது. பா.ஜ.,வை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளவர்களிடம், அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம், வாருங்கள் என்றால் வந்துவிடுவரா. யாரோ சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்கிறார்.
இவ்வாறு கூறினார்.