கோயில் நந்தவனங்களை பாதுகாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் அவகாசம்
மதுரை: தென்மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது. இந்திய மருத்துவ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென்மாவட்ட கோயில்களில் நந்தவனங்கள் இருந்தன. இவற்றின் பெரும்பகுதி வணிகவளாகம், அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் குவிக்கப்படுகின்றன.
கடவுளை வழிபட வரும் பக்தர்களுக்கு நந்தவனங்கள் அமைதி, நறுமணம் தருகின்றன. மருத்துவ குணமுடைய மரங்களிலிருந்து கிடைக்கும் மூலிகைக்காற்று நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நந்தவனங்களை பாதுகாக்கக்கோரி தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அவகாசமளித்த நீதிபதிகள் டிச.,17க்கு ஒத்திவைத்தனர்.