கட்சியை வலுப்படுத்தினால் கூட்டணி தானாக அமையும் மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி 'அட்வைஸ்'
மதுரை: ''இப்போதே கட்சியை வலுப்படுத்தினால்தான் சட்டசபை தேர்தலின்போது கூட்டணி அமைக்க பிற கட்சிகள் தானாக தேடி வரும். அதற்கு தகுந்தாற்போல் பணியாற்ற வேண்டும்'' என மாவட்ட செயலாளர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
நேற்றுமுன்தினம் பழனிசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 'கூட்டணி குறித்தோ, விஜய் கட்சி குறித்தோ எதுவும் பேச வேண்டாம்' என கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே அறிவுறுத்தப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய பூத் கமிட்டி அளவில் நிர்வாகிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பழனிசாமி பேசுகையில், ''கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சி வலுவாக இருந்தால் கூட்டணி தானாக அமையும். அதற்கேற்ப இப்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும் என்பதால் தி.மு.க.,வை தவிர்த்து பிற கட்சிகள் குறித்து தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை போராட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நானும் சுற்றுப்பயணம் வருகிறேன்'' என்றார்.
செல்லுார் ராஜூ 'ஆப்சென்ட்'
கூட்டத்திற்கு பிறகு மக்கள் பிரச்னையை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டு மதுரை மாநகராட்சி சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரிடம் ஆலோசித்து நவ.,16ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பழனிசாமி அறிவித்தார்.
மாநகராட்சி நகர் செயலாளர் செல்லுார் ராஜூ எல்லைக்குள் வருகிறது. ஆனால் அவர் கூட்டத்தில் பங்கேற்வில்லை. அவர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு குடும்பத்துடன் இலங்கை கதிர்காமம் முருகன் கோயிலுக்கு சென்றதால் பங்கேற்கவில்லை. அதுகுறித்து ஏற்கனவே பழனிசாமிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஜெ., ஸ்டைல்
2010ல் தி.மு.க., ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்து ஜெயலலிதா உத்தரவுபடி அ.தி.மு.க., மாதம் இருமுறை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்தது.
அதே ஸ்டைலை தற்போது பழனிசாமியும் கையில் எடுத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.