உடுமலை நகராட்சி விழாவில் பெண் அமைச்சர் புறக்கணிப்பு

உடுமலை; உடுமலை நகராட்சி விழாவில், அழைப்பிதழ், கல்வெட்டில், வேண்டும் என்றே பெண் அமைச்சரை புறக்கணித்து விட்டு விழா நடத்தியதாக, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. இதில், தி.மு.க., நகரச்செயலாளரும், 33வது வார்டு கவுன்சிலருமான வேலுசாமி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே, தலைவர்கள் பூங்கா, ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் உள்ளிட்டவை திறப்பு விழா நடந்தது.

இதில், திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த, அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. விழா அழைப்பிதழில் பெயர் போடாத நிலையில், பங்கேற்காத கலெக்டர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர்கள் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. ஆனால், அரசு நிகழ்ச்சியில், ஒரு பெண் அமைச்சரை, வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டுள்ளளது. நகராட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த தலைவர், '' மாவட்ட நிர்வாகம் அழைப்பிதழ், கல்வெட்டு தயாரித்ததால், குழப்பம் ஏற்பட்டது. அவர் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது; பெயர் உள்ளது'' என்றார்.

இதனால், நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், அமைச்சர் சாமிநாதன், கயல்விழி ஆகிய இருவர் உள்ள நிலையில், ஒரு அமைச்சரை மட்டும் வேண்டும் என்றே புறக்கணித்து வருவதாகவும், இதுதான் சமூக நீதி அரசா, என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், உடுமலை நகராட்சி விழாவில் புறக்கணிப்பு குறித்து, நகராட்சி கூட்டத்திலும் இப்பிரச்னை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement