ஆவின் பூத்கள் நவீனப்படுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தொண்டாமுத்தூர் ; கோவையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பூத்கள் நவீனப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பால் துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். பால் கொள்முதல் செய்யப்படும் இடம், பாலின் தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகம், பால் பாக்கெட் செய்யும் பகுதி, பதப்படுத்தும் பகுதி உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து நடந்த ஆய்வு கூட்டத்தில், மொத்தம் பால் கொள்முதல் செய்யப்படும் அளவு, தினசரி எத்தனை பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்படுகிறது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். கிராம புறங்களில் இருந்து, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள், பால் கொள்முதலை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்பின், கோவையில் உள்ள 191 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு, பாலின் தரம், அளவு மற்றும் ஒரு லிட்டர் விலை நிர்ணயம் செய்து உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்கும், தானியங்கி பால் பரிசோதனை கருவிகளை வழங்கினார்.

அதன்பின், அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,கோவை மாவட்டத்தில் அதிகளவு பால் உற்பத்தி ஆகிவிடுகிறது. இருப்பினும், கிராமப்புறங்களில் டீக்கடை, வீடுகளுக்கு, உற்பத்தியாளர்கள் நேரடியாக பால் விற்பனை செய்கின்றனர். இதனால், வெளிமாவட்டங்களில் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விரைவில், கோவை ஆவினுக்கான பால் முழுவதும், கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் பூத்களும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணையில், 10 கோடி ரூபாய் மதிப்பில், பன்னீர் தயாரிக்கும் பணி சோதனை முயற்சியில் உள்ளது.

விரைவில் துவங்கப்படும். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பால், 24 புதிய திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் மற்றும் பாலின் உப பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதே அரசின் நோக்கமாகும்,என்றார்.

Advertisement