பெண்களின் புகைப்படத்தை காட்டி வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி: ஆன்லையனில் வரும் எதையும் நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஆன்லைன் மோசடி பேர்வழிகள், மசாஜ் செய்வதற்கு பெண்கள் வேண்டுமா, உல்லாசமாக இருக்க பெண்கள் வேண்டுமா, என லோகாண்டோ ஆப்பை பயன்படுத்தி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடாகாவை சேர்ந்த வாலிபர்களிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பல லட்ச ரூபாயை மோசடி செய்தனர்.
புதுச்சேரியில் பதிவான புகார்களின் பேரில் சைபர் கிரைமிற்கு புதிதாக பொறுப்பேற்ற சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன் பேரில் போலீசார் சிறையில் உள்ள இரண்டு முக்கிய நபர்களை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட மோசடி கும்பலை சேர்ந்த ஐந்து பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 நபர்களை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எதையும் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.