ராணுவ அதிகாரி எனக்கூறி ஆசிரியையிடம் பண மோசடி
கோவை : ராணுவ அதிகாரி போல் நடித்து பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்தது தொடர்பாக துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, இருகூரை சேர்நதவர் சரண்யா, 36. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரின் தோழியின் மூலம் துடியலுார் முத்துநகரை சேர்ந்த ராஜேஷ் பிரித்திவ், 36 என்பவர் அறிமுகமானார்.
ராஜேஷ், தான் ராணுவ அதிகாரி என தெரிவித்தார். பின்னர், மத்திய அரசு அதிகாரிகள் பலரை எனக்கு தெரியும், அவர்களிடம் பேசி சரண்யாவுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி சரண்யாவிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ. 8 லட்சம் வரை பெற்றார். பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் ராஜேசிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களாகியும் வேலை கிடைக்காததால் சரண்யா தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.
அவர் திருப்பி கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த சரண்யா, துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜேஷ் பிரித்திவ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.