சென்டாக்கில் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு விருப்ப பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம் மாணவர், பெற்றோர் நலச்சங்கம் தகவல்
புதுச்சேரி: சென்டாக் மூலம், முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடக்க இருப்பதால், மாணவர்கள் விருப்பமான பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
இது குறித்து, மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த கல்வி ஆண்டு முதல், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் இரண்டு எம்.டி., (தோல் மற்றும் சரும வியாதி) இடங்களும், இரண்டு (மயக்கவியல்) படிப்பிற்கான இடங்களுக்கும், சுகாதாரத்துறை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வு சென்டாக் நிர்வாகத்தால், வரும் 18ம் தேதி அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு நடக்க உள்ளதால், வரும் 15ம் தேதிக்குள் மாணவர்கள் விருப்பமான பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே முதுநிலை மருத்துவ படிப்பிற்கு, சென்டாக் மூலம் விருப்ப பாடப்பிரிவு விண்ணப்பித்த படிப்பிற்கு புதியதாக, தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகள், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, சென்டாக் இணைய தளத்தில் காணப்படவில்லை.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வினை, சென்டாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையோடு நடத்த வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ்., என்.ஆர்.ஐ., மாணவர் சேர்க்கையில் நடந்த, விதிமீறல்களை களைந்து, போலியான வெளிநாட்டு, துாதரக சான்றிதழை வைத்து விண்ணப்பித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.