மொபைல் நிறுவன உரிமையாளரிட ம் ரூ.50 லட்சம் மோசடி சிட்பண்ட் நிறுவன பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் மொபைல் சர்வீஸ் நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் ஏமாற்றிய சிட்பண்ட் நிறுவனர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 40. அண்ணா சாலையில் மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நெல்லித்தோப்பு ரயில் பாலம் அருகே சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வரும் பிலோமினா என்பவர், சுந்தரமூர்த்தியை அணுகியுள்ளார். அப்போது, 20 மாதம் சீட்டு கட்டினால், பெரிய லாபம் கிடைக்கும் எனவும், தற்போது ரூ.50 லட்சத்திற்கான சீட்டு தொடங்க உள்ளோம். அதில் சேர்ந்தால் 2வது மாதமே முழு தொகையும் தந்து விடுவதாக பிலோமினா கூறியுள்ளார்.
இதைநம்பிய சுந்தரமூர்த்தி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீட்டிற்கான பணத்தை கட்டியுள்ளார். அப்போது, 2வது தவணை கட்டும்போது, முழுதொகையும் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, ஏலத்தில் வேறு ஒருவர் மருத்துவ செலவிற்காக பணம் கேட்டு இருப்பதால், அவருக்கு ஒதுக்கிவிட்டோம். அடுத்த மாதத்தில் தந்து விடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சுந்தரமூர்த்தி மாதந்தோறும் சீட் பணத்தை செலுத்தி விட்டு, முழு தொகையையும் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி பிலோமினா பணத்தை தராமல் தட்டி கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.50 லட்சம் சீட்டிற்கான கடைசி (20வது) தவணை தொகையான ரூ. 2 லட்சத்து 34 ஆயிரத்து 250யை பிடித்து கொண்டு, மீதமுள்ள தொகையை கொடுக்குமாறு சுந்தரமூர்த்தி கேட்டுள்ளார்.
அதற்கு, பிலோமினா கடந்த ஜூன் 10ம் தேதி அலுவலகத்திற்கு வந்து, அசல் தொகை ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், அலுவலகத்திற்கு சென்ற சுந்தரமூர்த்தியை பிலோமினா அவரது கணவர் ஜான் பியார், நண்பர் மணி ஆகியோர் அலுவலகத்தில் வைத்து இனி பணத்தை கேட்டு வந்ததால், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் பிலோமினா, அவரது கணவர் ஜான் பியார், நண்பர் மணி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.