லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி சென்னைக்கு மாற்றம்
கோவை ; லஞ்ச வழக்கில் சிக்கிய, கோவை மாவட்ட நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் (பொ) ராஜகுரு, சென்னை அலுவலகத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவை நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலியாக இருப்பதால், உதவி இயக்குனர் ராஜகுரு, அப்பொறுப்பையும் கூடுதலாக வகித்து வந்தார். கட்டட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, நிலப்பயன்பாட்டை மாற்றுவதற்கு விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.
கடந்த அக்., 23ம் தேதி பிற்பகல், 3:00 மணி முதல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அந்த அலுவலகத்தை கண்காணித்தனர். பத்திரப்பதிவுக்கு வருவோரில் பலர், தங்களது ஆவணங்களுடன் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்குச் சென்று வருவதை பார்த்தனர். அதனால், அங்கு சென்று விசாரித்தபோது, கட்டு கட்டுகளாக பணம் இருந்தது. வணிக கட்டட அனுமதிக்காக, ஜனார்த்தனன் என்பவர், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீரா (எ) பொன்னப்பனிடம் வழங்கிய தொகை என கூறப்பட்டது. மொத்தம், மூன்று லட்சத்து, 96 ஆயிரத்து, 100 ரூபாய் இருந்தது. இருவரிடமும் தனித்தனியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர். அதற்கு, 'வணிக கட்டட திட்ட அனுமதிக்கு ஜனார்த்தனன் செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை, எனது சொந்த பணத்தில் செலுத்தினேன்; அத்தொகையை கொடுத்திருக்கிறார்' என, வீரா கூறியிருக்கிறார்.
விண்ணப்பதாரர் ஜனார்த்தனனிடம் விசாரித்தபோது, 'நகர ஊரமைப்புத்துறைக்கு செலுத்த வேண்டிய, 12 லட்சம் ரூபாயை முன்னரே செலுத்தி விட்டேன். மாநகராட்சிக்கு செலுத்த, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறினர். அதனால், வீட்டில் இருந்த தொகையை எண்ணிப் பார்க்காமல் எடுத்து வந்தேன்; அதில், நான்கு லட்சம் ரூபாய் இருப்பதாக நினைத்தேன். இத்தொகையை கொடுத்த பிறகே, வணிக கட்டடத்துக்கான திட்ட அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது' என, வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
போலீசார் சேகரித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதுதொடர்பாக, நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். திட்ட அனுமதி பெற அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான, 11 லட்சத்து, 49 ஆயிரத்து, 442 ரூபாய் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். ஜனார்த்தனன் வங்கி கணக்கு மற்றும் அவரது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்திகள் மூலமாக உறுதி செய்யப்பட்டது.
அதனால், மூன்று லட்சத்து, 96 ஆயிரத்து, 100 ரூபாயை, நகர ஊரமைப்பு துறை இணை இயக்குனர் அலுவலக அதிகாரிக்கு கொடுப்பதற்காக, ஜனார்த்தனன் என்பவரிடம் வீரா பெற்ற லஞ்சப் பணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில், அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
இம்முறைகேடுகளில் தொடர்புடையதாக கருதப்படும் நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் (பொ) ராஜகுரு, ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீரா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதிக்கு அறிக்கை அனுப்பினர். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனர் (பொ) ராஜகுரு சென்னை அலுவலகத்துக்கு நேற்று இட மாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கடலுாரில் உதவி இயக்குனராக பணிபுரியும் புருசோத்தமன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரே அடுத்த உத்தரவு வரும் வரை, இணை இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க வேண்டும் என, நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.