அரிக்கமேட்டில் ரோமானிய சரக்கு கப்பல் அமைகிறது: ரூ.11 கோடியில் பிரமாண்டமான திட்டம்

புதுச்சேரி: பண்டைய காலத்தில் பல நாடுகளுடன் வாணிபத்தில் செழித்தோங்கிய வரலாற்று சிறப்புமிக்க அரிக்கமேட்டில் ரூ.11 கோடி செலவில், ரோமானிய சரக்கு கப்பல் மாதிரி பிரமாண்டமாக அமைகிறது.

பழங்கால துறைமுகங்களில் ஒன்றான புதுச்சேரியின் அரிக்கமேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் மிகவும் செழிப்புற்று வளர்ந்திருக்கின்றது. அரிக்கமேடு கி.மு., 200 முதல் கி.பி.,200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி,இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரிய வந்துள்ளது.

இவ்வளவு வரலாற்று பெருமைமிக்க அரிக்கமேட்டில் 11 கோடி செலவில் ரோமானிய சரக்கு கப்பல் மாதிரியுடன், தகவல் மையத்துடன் பிரமாண்டமாக அமைய உள்ளது. இதற்கான ஒப்புதலுக்காக மத்திய தொல்லியல் துறைக்கு புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சுற்றுலா துறை ஏற்கிறது.

அரிக்கமேடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இதில் கட்டுமானம் ஏதும் செய்ய அனுமதி இல்லை. எனவே அரிக்கமேடு வேலிக்கு அப்பால் ஆற்றக்கரையில் ரோமன் சரக்குக் கப்பல் மாதிரி, மிதக்காத, அசையாத வகையில், மரம், எஃகு, பைபர் அல்லது சிந்தட்டிக் பொருட்களை கொண்டு வலுவாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோமானிய சரக்குக் கப்பல் மாதிரி விளக்கம் கீழ் தளம், நடுத்தளம் மற்றும் மேல்தளம் என்று மூன்று தளங்களைக் கொண்டு இருக்கும்.

கீழ் தளம் கல்வி, நுாலகம், படிப்பு கூடம், கலைப்பொருட்கள், மாநாடு, கண்காட்சி மண்டபம் என புற தொடர்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நடுத்தர தளத்தில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை அலுவலகம், அருங்காட்சியகம் அசத்தலாக அமைகிறது. மேல் தளத்தில் பார்வையாளர்களுக்கான சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்கும்.

ரோமானிய சரக்குக் கப்பல் ஆற்றுப் படுகை மண்ணில் அடிவாரத்தில் கட்டுமானம் அல்லது அடித்தள குழி செயற்கைப் பொருட்கள் எதுவும் இல்லாமல் நிறுவப்பட உள்ளது. அதாவது, முழு கப்பலும் மர கட்டைகள் மீது வைக்கப்பட உள்ளது. இதனால் அரிக்கமேட்டின் தொல்லியல் தளத்திற்கு எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், இது நீர் அரிப்பிலிருந்து தளத்தைப் பாதுகாக்கும் என்பதால் தொல்லியல் பிரச்னைகள் இருக்க வாய்ப்பில்லை.

அரிக்கமேடு தளத்தின் நுழைவு வாயிலில் பார்வையாளர்களுக்கான பார்க்கிங் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த மாதிரி கப்பலை அடைவதற்கான நடைபாதை தெற்கு பக்க வேலி வழியாக அமைக்க திட்டம் தீட்டப்பட்டு, முழு திட்ட அறிக்கையில் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரிக்கமேட்டில் கடந்த 1837 இல் துப்ரே என்ற பிரெஞ்சு ஆய்வாளர் இவ்விடத்தின் வரலாற்று சிறப்புகளை முதல் முதலாக அறிவித்தார்.பின் 1941 இல் பிரெஞ்சு அகழ்வாய்பு குழுவினர் இங்கு மேலும் சில இடங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்திய அரசின் தொல்லியல் துறை இயக்குனர் மாத்திமர் வீலர் என்வரால் கடந்த 1945 இல் அறிவியல் நோக்கில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியாவில் முதன் முதலாக அறிவியல் நோக்கில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement