பிரியங்காவுக்கு ஜமாத்-இ- இஸ்லாமி ஆதரவு; கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

13

திருவனந்தபுரம்: வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்காவுக்கு அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.


வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அனைத்து கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், அடிப்படை வாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவுக்கு பின்புலமாக ஜமாத்-இ- இஸ்லாமி அமைப்பு இருந்து வருகிறது. இதில், காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? இதன்மூலம், காங்கிரஸின் மதச்சார்பின்மை என்ற முகமூடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஜமாத் அமைப்பினருக்கு நாடோ அல்லது ஜனநாயகமோ முக்கியமில்லை. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் ஜமாத்-இ- இஸ்லாமி அமைப்பினர் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தனர். அவர்களின் நோக்கமே மார்க்சிஸ்ட் வேட்பாளர் முகமது யூசப் தரிகாமியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.

ஜமாத் அமைப்பினருக்கு ஒரே ஒரு கொள்கை தான். ஜனநாயக முறையிலான அரசை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுதான் அவர்களின் சித்தாந்தம். தற்போது அவர்களுக்கு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆதரவு தேவை.


மதச்சார்பின்மைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அனைத்துவிதமான மதவெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத்-இ-இஸ்லாமியின் வாக்குகளை வேண்டாம் என்று காங்கிரசால் சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.


ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement