பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு; பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு
மதுரை ; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் கடலுக்குள் பாம்பனில் ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம் கடல் காற்றால் அடிக்கடி துருப்பிடிப்பது, பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதாக இருந்தது. இந்த இடத்தில் ரயில்கள் செல்கையில் வேககட்டுப்பாடு காரணமாக 10 கி.மீ., வேகத்தில் சென்று வந்தன.
எனவே புதிய பாலத்தை நவீனமாக மாற்றி அமைக்க ரூ.550 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. பழைய பாலம் இரண்டாக பிரிந்து இருபுறமும் பாலம் மேல்நோக்கி உயரும் வகையில் இருந்தது.
தற்போது அமைய உள்ள பாலம் கடலில் கப்பல்கள் வரும்போது 'சென்சார்' உதவியால், பாலத்தின் பகுதி செங்குத்தாக மேல்நோக்கி உயரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இம்முறையில் அமையும் முதல் பாலம் இது.
வடக்கே காசியைப் போல தேசிய அளவில் தெற்கே ஆன்மிக பூமியான ராமேஸ்வரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதால் பிரதமர் இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அதற்கேற்ப ரயில்வே பொது மேலாளர் முதல் தொழில் நுட்ப நிபுணர்கள் வரை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நவ.,13, 14 ல் இந்திய பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ய உள்ளார்.
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து, துவக்க விழா டிச.,4 முதல் 12ம் தேதிக்குள் இருக்கலாம். நவ.,27 க்குள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டனில் அரசியல் படிப்பை முடித்து தாயகம் திரும்புகிறார். அவர் வந்தபின் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க உள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை துவக்கும் வகையில் கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்த உள்ளார். உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்து மாநாடு நடப்பதாக உள்ள நிலையில், பிரதமரை பங்கேற்க செய்ய அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார். இதனால் ராமேஸ்வரம் நிகழ்ச்சியுடன், பா.ஜ., மாநாட்டிலும் பங்கேற்கும் வகையில் பிரதமர் வர வாய்ப்புள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர்.
வடக்கே காசியைப் போல தேசிய அளவில் தெற்கே ஆன்மிக பூமியான ராமேஸ்வரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதால் பிரதமர் இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.