கனடா பிரதமருக்கு கட்டம் சரியில்லை; கணித்தார் எலான் மஸ்க்!
புதுடில்லி: 'கனடா பிரதமர் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் வெளியேறுவார்' என அவரது அரசியல் எதிர்காலம் குறித்து உலக பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் சமூகவலைதள உரிமையாளருமான எலான் மஸ்க் கணித்துள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம், அவருக்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் விலகுவதாக கூறி, ட்ரூடோவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், 'ஜெர்மனியில் சோசலிச அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து வருகிறது' என சமூகவலைதளத்தில் ஒரு பயனர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் ,'கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் காணாமல் போய்விடுவார்' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஒரு பயனர், 'எலான் மஸ்க் கனடாவில் ட்ரூடோவை அகற்றுவதற்கு உங்கள் உதவி தேவை' என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் அக்.,20ம் தேதி 2025ம் ஆண்டிற்குள் அல்லது அதற்கு முன் நடக்கவிருக்கும் கனடா தேர்தலில் வெளியேறுவார் என எலான் கூறியிருப்பதாவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2013ம் ஆண்டில் இருந்து லிபரல் கட்சியை வழிநடத்தி வரும் ட்ரூடோவுக்கு வரும் தேர்தல் சவாலாக இருக்கும் என கணித்துள்ளனர் அரசியல் வல்லுநர்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.