தி.மு.க., நிர்வாகிக்கு எதிராக சி.ஐ.டி.யு., திடீர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், : தி.மு.க., நிர்வாகிக்கு எதிராக திருப்பூரில், 'டாஸ்மாக்' ஊழியர் சி.ஐ.டி.யு., சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட 'டாஸ்மாக்' ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் திருச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கூறியதாவது:

தாராபுரத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை ஊழியர்களிடம் தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், மாதந்தோறும் மாமூல் வழங்க வற்புறுத்தி வந்தனர். சி.ஐ.டி.யு., கூட்டத்தில் 'மாமூல் கொடுக்கக்கூடாது' என்று முடிவு செய்தோம்.

இதற்கு பழிவாங்கும் வகையில், தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் தலையீடு காரணமாக, சி.ஐ.டி.யு., சங்க தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் கனகராஜ் ஆகியோரை எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தற்போது பணியாற்றி வரும் கடையில் இருந்து வெகு துாரத்துக்கு அதிகாரிகள் இடம் மாற்றியுள்ளனர். தி.மு.க., நிர்வாகி மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தம் நேற்றுமுன்தினம் தாராபுரம் போலீசில் அளித்த புகாரில், ''என் மீது சி.ஐ.டி.யு.,வினர் பல்வேறு அவதுாறுகளை பரப்பி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர் இடமாற்றத்துக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement