ஒரு வாரத்தில் ஆறு போலீசார் சஸ்பெண்ட்; எஸ்.பி.,அதிரடி கடமையை மீறினால் கடும் நடவடிக்கை -என எச்சரிக்கை
கோவை; கடமையை மீறி செயல்பட்ட போலீசார் ஆறு பேரை கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார் இரவு, பகல் என பணியாற்றி வருகின்றனர். சேவை மனப்பான்மையில் பணியாற்றி வரும் பல போலீசார் மத்தியில் ஒரு சிலர் கடமையை மீறி செயல்படுவதையும் பார்க்க முடிகிறது.
கோவை மாவட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்தி, தடுக்க கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கடமை தவறும் மற்றும் சட்டத்தை மீறும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் பணம் பெற்றதற்காக பேரூர் மதுவிலக்கு பிரிவு தலைமைக் காவலர் மதன்குமார், சிறப்பு எஸ்.ஐ., பிரபாகரன், வடக்கிபாளையம் சோதனை சாவடி வழியாக செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்ற தலைமை காவலர் செல்வகுமார், காவலர் பஞ்சலிங்கம், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் நடுரோட்டில் மேஸ்திரியை தாக்கிய காவலர் ரஞ்சித் மற்றும் ஆனைமலையில்ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்த இன்ஸ்பெக்டர் டிரைவர் யாசிர் ஆகியஆறு போலீசாரை எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து எஸ்.பி., கார்த்தியேன் கூறுகையில், '' சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக, கடமையை மீறி செயல்படும் போலீசார் மீதும் சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.