இறங்கி ஏறும் தங்கம் விலை; நேற்று ரூ.1320 குறைவு; இன்று ரூ.680 அதிகரிப்பு!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த அக்டோபர் 30ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 59,520 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை சற்று குறைந்தது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்தன. அதேபோல, தங்கம் விலையும் சரிவை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதன்படியே, நேற்று தங்கம் விலை ரூ.1,320 குறைந்து மக்களை நிம்மதியடையச் செய்தது.
நேற்று முன்தினம் (நவ.,07) தங்கம் கிராம், 7,365 ரூபாய்க்கும், சவரன், 58,920 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (நவ.,08) தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 7,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் சரிந்து ரூ. 57,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.58,280க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1,03,000க்கும் விற்பனையாகிறது.