ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தோற்கடிப்போம்
காரைக்குடி:'ஒரே நாடு ஒரே தேர்தல், சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தால் நாங்கள் தோற்கடிப்போம்,' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சியில் காங்., அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிதம்பரம் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணி ஸ்டாலின் தலைமையில் வலிமையாக இருக்கிறது. யாரும் இதை உடைக்க முடியாது. வரும் தேர்தலிலும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்தாமல் சட்டத்தை நிறைவேற்ற முடியாது. அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். பா.ஜ., விற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அந்த பெரும்பான்மை கிடையாது. சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தால் நாங்கள் அதை தோற்கடிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறாது.
காஷ்மீரில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மாநில அந்தஸ்து தருவோம் என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி தந்தது. காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. நீதிபதிகள் அதனை விசாரிப்பதாக தெரிவித்தனர். அந்த விசாரணை தொடங்கும் போது அரசு வழக்கறிஞர் அதை விசாரிக்காதீர்கள், நாங்களே மாநில அந்தஸ்தை விரைவில் தந்து விடுவோம் என்றனர்.
ஆனால் தீர்ப்பு வந்திருந்தால், மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைத்தது செல்லாது என்றே தீர்ப்பு வந்திருக்கும்.
தேர்தல் நடந்து விட்டது. ஏன் மாநில அந்தஸ்தை தருவதற்கு தயங்குகிறார்கள். சட்டமன்றத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் அமளி கிளப்பினால் அது சட்டசபையில் குழப்பம் இல்லை. அவர்களுடைய எண்ணத்தில் குழப்பம். இவ்வாறு கூறினார்.