உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்:கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அருகில் உள்ள உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் நிர்வகிக்கப்படும் மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, உணவில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.